இந்தியா முதல் இன்னிங்ஸில் 475 ஓட்டங்கள் குவிப்பு
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 475 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 0–2 என தொடரை இழந்தது.
நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 572 ஓட்டங்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
நேற்றைய மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 342 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 230 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது. கோஹ்லி (140), சகா (14) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோஹ்லி மேலும் 7 ஓட்டங்கள் எடுத்து 147 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பிறகு விக்கெட் கீப்பர் சகா 35 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி ‘பாலோ ஆனை’ தவிர்த்தது.30 ஓட்டங்கள் குவித்த நிலையில், புவனேஷ்வர் குமார் சந்தேகத்துக்கு இடமான முறையில் வெளியேறினார். அஷ்வின் அரைசதம் (50) அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் முகமது ஷமி ஒரு சிக்சர், 2 பவுண்டரி என விளாசி தள்ளினார். பின் உமேஷ் யாதவ் (4) ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் 475 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனையடுத்து 97 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை அவுஸ்திரேலியா தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர் (4) ஏமாற்றம் தந்தார். இவர் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.தேநீர் இடைவேளையின் போது, இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட்டுக்கு 38 ஓட்டங்கள் பெற்றிருந்தது. வாட்சன் (13), ரோஜர்ஸ் (21) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் தொடர்ந்து விளையாடிய வாட்சனை (16) அஸ்வின் வெளியேற்றினார். தற்போது ரோஜர்ஸ், அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் விளையாடி வருகின்றனர்.








