"ஐ' திரைப்படம் வெளியிடத் தடை
இயக்குநர் சங்கர் இயக்கி, நடிகர் விக்ரம் நடித்த "ஐ' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா லிமிட் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "ஐ' படம் தயாரிக்க உள்ளதாக ஆஸ்கர் நிறுவனம் எங்களிடம் தெரிவித்தது.
படத்தைத் தயாரிப்பதற்காக ரூ. 15 கோடியை கடனாக ஆஸ்கர் நிறுவனம் எங்களிடம் வாங்கியது. இந்தக் கடன் தொகைக்கு 6 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில், பணத்தை திருப்பித் தரும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, வட்டியுடன் சேர்த்து ஏறத்தாழ ரூ. 17.5 கோடி தொகையை ஆஸ்கர் நிறுவனம் எங்களுக்கு கடனாகத் தர வேண்டும். இயக்குநர் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகின்றன.
ஆனால், எங்களுக்குத் தர வேண்டிய கடன் தொகையை ஆஸ்கர் நிறுவனம் இதுவரை திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே, ஐ படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதுவரை இந்தியா, வெளிநாடுகளில் அந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஆஸ்கார் நிறுவனம் உள்பட நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அதுவரை "ஐ'படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், சமரசம் மூலம் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யுமாறும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.








