ஜோசப் வாஸ் அடிகளாருக்கு புனிதர் பட்டம்
கொழும்பு, காலி முகத்திடலில் இன்று பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸால் நடத்தப்படும் விசேட திருப்பலி ஆராதனையின் போது முக்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராக உயர்த்தப்படுவார்.
இரு நாட்கள் திருயாத்திரையை மேற்கொண்டு இலங்கைக்கு நேற்றுக் காலை வருகைதந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்த கொழும்பு வரை விசேட வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டார். இதன்போது, வீதியின் இருமருங்கிலும் அலை கடலெனத் திரண்ட மக்கள் பாப்பரசரை பெரும் ஆரவாரத்தேடு வரவேற்று ஆசி பெற்றனர். பாப்பரசரின் காலை முதல் காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், பவனி வந்துகொண்டிருந்த பாப்பரசர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களுக்கு ஆசி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு, மாபோல, வத்தளை, பேலியகொட சுற்றுவட்டம், இங்குறு கொட சந்தி, ஆமர் வீதியூடாக பொறளையில் அமைந்துள்ள பேராயர் இல்லத்திற்குச் சென்ற பாப்பரசர், இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் விசேட திருப்பலி ஆராதனையை ஒப்புக்கொடுக்கிறார்.
இலங்கை வாழ் அனைத்து கத்தோலிக்க - கிறிஸ்தவ மக்களும் கலந்துகொள்ள மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திருப்பலி ஆராதனையின்போது, முக்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளார் பாப்பரசரினால் புனிதராக திருநிலைப்படுத்தப்படுவார். 1651 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இந்தியாவிலுள்ள கோவா எனும் பகுதியில் பிறந்த ஜோசப் வாஸ் அடிகளார், தனது இறைத்தொண்டை மேற்கொள்வதற்காக 1687 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைத் தந்தார்.
இங்கு வந்த அவர் யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் கண்டி பிரதேசங்களுக்கு சென்று 24 வருடங்கள் இறைப்பணியாற்றினார். இவர் 1711 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி கண்டியில் இறைவனடி சேர்ந்தார். இவ்வாறு இலங்கை வாழ் மக்களுக்கு அளப்பெரும் சேவையாற்றிய ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக உயர்த்தும் பாப்பரசர் பிரான்சிஸ், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விமானப் படையின் ஹெலி மூலம் வரலாற்று சிறப்புமிக்க புனித தலமான மன்னார், மடு மாதா தேவாலயத்தை வந்தடைவார்.
அங்கு விசேட செபமாலை ஆராதனையிலும் ஈடுபடுவார். அங்கிருந்து இன்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் கொழும்பிற்கு வருகை தருவார். நாளை காலை 8.15 மணிக்கு பொலவலான பகுதியில் அமைந்துள்ள 16 ஆம் ஆசீர்வாதப்பர் கலாசார கல்வி நிலையத்தை திறந்து வைப்பார். பின்னர் காலை 8.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து அங்கு இடம்பெறும் பிரிவு உபசார நிகழ்வில் பங்குகொண்டு 9 மணிக்கு பிலிப்பைன்ஸின் மணிலா நகரை நோக்கிப் புறப்படுவார்.








