கட்சி மாறுவது டக்ளசுக்கு ஒன்றும் புதிதல்ல - சுரேஸ்
காலங்காலமாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்திடம் ஆதரவு என்ற போர்வையில் செல்வது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஒன்றும் புதிதல்ல எனத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையப்போகும் அரசாங்கத்திடம் அமைச்சர் டக்களஸ் சென்றாலும் அந்த அரசாங்கம் இணைத்துக் கொள்வதென்பது பெரும் கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்ற ஐனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பாகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மகிந்த ராஐபக்சவிற்கு ஆதரவு வழங்கியிருந்தது.
இந்நிலையில் வடக்கிற்கு விஐயம் மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது தான் வெற்றி பெற்றால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்சிப் பொருளாகவே இருப்பாரெனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தலில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஆதரவு வழங்கிய மகிந்த ராஐபக்ச தோல்வியுற்று கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு புதிய அரசாங்கமொன்றையும் அமைக்கவுள்ளார்.
இந்த புதிய அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படுமாயின் அந்த அரசிற்கும் ஆதரவு வழங்கி இணைந்து செயற்படத் தயாரென நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்த நிலையிலையே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவே இருக்க விரும்புகின்றார். ஆனால் மக்கள் அமைச்சராக வருவதை விரும்பவில்லை.
ஏனெனில் இந்தத் தேர்தலில் ஐனாதிபதியை மட்டுமல்லாது, அமைச்சரவையையும் தான் மக்கள் தோற்கடித்திருக்கின்றனர்.
இந்நிலையிலையே ஆட்சிக்கு வந்துள்ள அரசிற்கு ஆதரவு வழங்குவதாகக் கூறுவது அமைச்சருக்கு ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த குறிப்பாக முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையிலான ஆட்சியிலும் அமைச்சராகவே இருந்தார்.
அதே போன்று முன்னாள் ஐனாதிபதி தலைமையிலான அரசிலும் அமைச்சராக இருந்தார்.தற்போது இந்த அரசிற்கும் ஆதரவு கொடுப்பதாகக் கூறி அமைச்சராக இருக்க விரும்புகின்றார்.
ஆனால் அமைச்சர் ஆதரவு கொடுத்துச் சென்றாலும் முதலில் அந்த அரசாங்கம் அவர்களை இணைத்துக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.








