Breaking News

தேர்தல் விளம்பரங்களுக்காக அரச பணத்தை ஏப்பம் விட்டார் மகிந்த

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்காக, 2 பில்லியன் ரூபா அரசாங்கப் பணத்தைச் செலவிட்டுள்ளதாக, நிதியமைச்சு அதிகாரிகளை ஆதாரம்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக விளம்பரங்களுக்கு மகிந்த ராஜபக்ச மில்லியன் கணக்கான ரூபா பணத்தை செலவிட்டிருந்தார்.அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக, அவர் 2 பில்லியன் ரூபாவைச் செலவிட்டிருந்தார்.

அதேவேளை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, மைத்திரிபால சிறிசேன, 676 மில்லியன் ரூபாவை விளம்பரங்களுக்காக செலவிட்டிருந்தார். தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை ஒளிபரப்புச் செய்வதற்காக மட்டும், மகிந்த ராஜபக்ச 1 பில்லியன் ரூபாவை செலவு செய்திருந்தார்.

வானொலிகளில் விளம்பரங்களை ஒலிபரப்புவதற்கு, 330 மில்லியன் ரூபாவையும், எல்லா நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்களை பிரசுரிப்பதற்கு 700 மில்லியன் ரூபாவையும் மகிந்த ராஜபக்ச செலவிட்டிருந்தார்.தயாரிப்புச் செலவை உள்ளடக்காமல், இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 2.03 பில்லியன் ரூபாவாகும்.

இதற்காக செலவிடப்பட்டது அரசாங்க நிதியாகும். அதிபர் செயலகம் மற்றும் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியே இதற்குப் பயன்படுத்தப்பட்டது.
எனினும், தயாரிப்புச் செலவை உள்ளிடக்கியதான, விளம்பரச் செலவுகள் இதைவிடவும் அதிகமாகவே இருக்கும் என்று நிதியமைச்சு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ளூர் ஊடகங்களில் மட்டுமன்றி, வெளிநாட்டு தமிழ், ஆங்கில, சிங்கள இணைய ஊடகங்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் இணையங்களிலும் கூட மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.