Breaking News

இராணுவம் தேர்தல் கடமையில் ஈடுபடவில்லை - ருவன் வணிகசூரிய

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு பாரிய சம்பவங்களும், வாக்களிப்பு நேரத்தில் இடம்பெறவில்லை
என அவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். தேர்தல் நடைபெற்ற வேளை அனைத்து பிரதேசங்களுக்கும் உயரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 


மேலும் இங்கு கருத்து வெளியிட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் கடமைகளுக்காக எந்த வொரு வாக்குச்சாவடிகளுக்கு இராணுவம் அனுப்பி வைக்கப்படவில்லை, எனவும் நடைபெற்ற தேர்தலின் மூலம் இதனை நன்கு அறிய முடியும் எனவும் ருவன் வணிக சூரிய சுட்டிக்காட்டியுள்ளார். 

வடகிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் இராணுவம் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் தீவு பகுதிகளில் இருந்த வாக்குப் பெட்டிகளை கொண்டுவர மாத்திரம் கடற்படையினர் பயன்படுத்தப்பட்டதாகவும் வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பிற்கு பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

 இராணுவத்தினர் அனுப்பட்டதால், வாக்களிப்பு குறையலாம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் நாட்களில் பொலிஸ் திணைக்களத்திற்கு தேவைப்பட்டால் அவசியம் ஒத்துழைப்பு வழங்கப்படும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.