மகிந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்
அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மக்களால் தண்டிக்கப்பட்ட மகிந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவுநர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கையின் ஏழாவது ஜேனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதைக் காட்டிலும் மன நிறைவளிக்கும் மற்றொரு விஷயம் இந்த தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது தமிழர்கள் என்பது தான். ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோற்ற போதிலும் சிங்களவர்கள் அதிகம் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ராஜபக்ச தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார்.
இதனால் ராஜபக்ச பெற்ற முன்னிலையைக் கடந்து மைத்திரி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகான தமிழர்களின் வாக்குகள் தான் என்பதை மறுக்க முடியாது. 2005 ம் ஆண்டு தேர்தலில் மகிந்த வெற்றி பெறுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள் தான். அத்தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததால் தான் ரணில் விக்கிரமசிங்கவை 1.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜபக்ச ஜனாதிபதியாக முடிந்தது.
மகிந்த ஜனாதிபதியாக வருவதற்கு காரணமாக இருந்த தமிழர்களே இப்போது அவரை தண்டித்திருப்பது இனிமையான பழிவாங்கல் தான். இதை உணர்ந்து ஈழத் தமிழர்கள் பிரச்னையில் எச்சரிக்கையுடனும், நன்றியுடனும் மைத்திரிபால சிறிசேன நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் இலங்கையின் புதிய நிர்வாகம் நிறைவேற்றுவதை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








