Breaking News

இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு நிதியுதவி

இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் ரூ. 3 இலட்சம் நிதி (இந்திய ரூபாய்) வழங்கவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 

இதுகுறித்து அகதிகள் மறுவாழ்வு கமிஷனர் ஜனவரி 27ல், அகதிகளிடம் கருத்து கேட்க உள்ளார். கடந்த 1983ம் ஆண்டு முதல், இலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததும், இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்தனர். 

தமிழகத்தில் உள்ள 116 முகாமில், 1.20 இலட்சம் அகதிகள் தங்கி உள்ளனர். இவர்கள் குடும்ப செலவுக்காக ரூ. 3.25 கோடியும், மின்சாரம், உணவு பொருட்களுக்காக ரூ. 70 இலட்சமும் மத்திய, மாநில அரசுகளால் மாதந்தோறும் செலவிடப்படுகிறது. 

இது அகதிகளுக்கு போதுமானதாக இல்லை. தற்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், ´வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நாடு திரும்பினால், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கிட தற்போதைய அரசு தயாராக உள்ளது,´ என்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அறிவிப்பும், தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 

இந்நிலையில், இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள், அங்கு தொழில் தொடங்கவும், அடிப்படை வசதிகளுக்காகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 இலட்சம் வீதம் பணம் அல்லது தேவையான பொருட்கள் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக, அகதிகளிடம் கருத்து கேட்க, மாநில அகதிகள் மறுவாழ்வுத்துறை கமிஷனர் வரும் ஜனவரி 27 ல், மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர். 

இலங்கை திருகோணமலை சேர்ந்த அகதி ப. வரதன் கூறியதாவது: இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் நாங்கள் அங்கு சென்றால் அன்றாட தேவைக்கு யாரிடம் உதவி கேட்பது?. இந்திய, இலங்கை அரசுகள் இணைந்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உத்தரவாதம் அளித்தால், இலங்கைக்கு செல்வோம், என்றார்.