Breaking News

உலகக்கிண்ணப் போட்டியில் கழற்றிவிடப்பட்ட முன்னணி வீரர்கள்

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கவுள்ள உலகக்கிண்ண போட்டியில் இருந்து சில முன்னணி வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்தப்போட்டிகள் தொடங்க இன்னும் 33 நாட்கள் உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 14 நாடுகளின் அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்தப்போட்டியில் சிறந்த வீரர்கள் பலருக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் தொடர் நாயகன் விருதை பெற்ற யுவராஜ்சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள பிராவோ, பொல்லார்ட், இங்கிலாந்து அணித்தலைவராக பணியாற்றிய குக் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

யுவராஜ் சிங்

2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இந்தியா கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் யுவராஜ்சிங்.

9 ஆட்டத்தில் 362 ஓட்டங்கள் குவித்தார். 15 விக்கெட் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

மோசமான ஆட்டம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவருக்கு ரவிந்திர ஜடேஜா காயம் மூலம் உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

இதற்கு ஏற்ற வகையில் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் சதம் அடித்தார். இருப்பினும் தேர்வு குழு அவரை கழற்றிவிட்டது.

இங்கிலாந்து அணித்தலைவர் குக்

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் பதவியோடு அணியில் இருந்தும் நீக்கப்பட்டவர் கூக்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததோடு அவரது ஆட்டமும் மோசமாக இருந்தது. இதனால் அவர் நீக்கப்பட்டு மார்கன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

வெய்ன் பிராவோ, பொல்லார்ட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர்களான வெய்ன் பிராவோ, பொல்லார்ட் இருவரும் நீக்கப்பட்டது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சம்பள பிரச்சனை தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் போக்கை கடை பிடித்ததே நீக்கத்துக்கு காரணமாகும்.

உமர் குல், கம்ரன் அக்மல்

பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவரான உமர்குல்லும் உலகக்கிண்ண அணியில் இடம் பெறவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் விக்கெட் கீப்பரும், முன்னணி துடுப்பாட்டக்காரருமான கம்ரன் அக்மலும் நீக்கப்பட்டார்.

இதேபோல ரியான் ஹாரிஸ் (அவுஸ்திரேலியா), அஜந்தா மெண்டீஸ் (இலங்கை), ஜிம்மி (நியூசிலாந்து), ராபின் பீட்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரும் நீக்கப்பட்டனர்.