Breaking News

நான் ஒரு பிசாசு- ஜனாதிபதி (இரண்டாம் இணைப்பு)

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது என்ற பழமொழிக்கிணங்க, இந்த தெரிந்த பிசாசான மஹிந்தவுடன் ஒன்றுசேருங்கள்.


 உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

'வட பகுதிக்கு பலவேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன். கல்வித்துறையை மிகவும் சிறப்பாக மேம்படுத்தியுள்ளோம். இந்நாட்டில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம் பிடித்தவர் உங்கள் பகுதி மாணவனே. நாம் செய்த கல்வி அபிவிருத்தி தான் இந்நிலைக்கு காரணம். மைத்திரிபால சிறிசேன தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்கள் பணம் செலுத்தி கல்வி பெற வேண்டும் என கூறுகிறார்.

 இதன்மூலம் இலவசக் கல்வியை இல்லாமல் செய்ய பார்க்கிறார். இலங்கையிலுள்ள இலவச சுகாதாரம் மற்றும் இலவசக்கல்வியில் கை வைக்க ஒரு போதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் சொல்பவர்கள் நாங்கள் இல்லை. நாம் தெளிவாக சொல்கிறோம் மின்சாரம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்பவற்றோடு கல்வியையும் அபிவிருத்தி செய்து உலகை வெல்லும் பிள்ளைகளை உருவாக்குவதே எமது நோக்கம். உங்களது பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், அதற்கு வராவிட்டால் நாம் என்ன செய்வது. நாம் ஐனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என தெரிந்தும் வடமாகாண சபை தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண மக்களுக்கு என்ன செய்தார்கள்;. இரணைமடு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கு தடைவிதித்தார்கள்.

ஆனால் உங்களுக்காக அந்நீரை கட்டாயம் பெற்றுத்தருவேன். நான் சிறுவயதிலிருந்தே பல தடவைகள் வடக்குக்கு வந்துள்ளேன். ஆனால் மைத்திரி எத்தனை தடவை வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு மைத்திரியை தெரியுமோ என எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை நன்றாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது எங்கு சென்றாலும் அபிவிருத்தி வேலைகள் தான் கண்ணுக்கு தெரியும். ஏ - 9 வீதி, புகையிரதம் மிகவும் சிறப்பாக உள்ளது.

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள்.இனவாத அரசு எமக்கு தேவையில்லை. எமக்கு பாசம் தான் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன்' என தெரிவித்தார். -

 இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் - மகிந்த 

 யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.

தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.      அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதாரமும், கல்வியும் தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 இந்த நிலையில் தனியார் துறை எனின் கல்லூரிகளுக்கு பணம் செலுத்தியே எதிர்காலத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய சூழல் ஏற்படும்.    இதனால் அதிகளவான பணத்தை நாம் செலவழிக்க வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி தற்போதைய நடைமுறையிலும் இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் சரி இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   எனவே சுகாதாரத்திலும் சரி கல்வியிலும் சரி யாரையும் கைவைக்க விடமாட்டேன்.

 கடந்த 3 வருட காலத்தில் பாதிப்படைந்திருந்த கல்வியை மீண்டும் வடக்கில் மீட்டெடுத்துள்ளோம்.     அண்மையில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளில் தேசிய ரீதியில் கணித பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தை பெற்றுள்ளமையை இதற்கு உதாரணமாக கூறமுடியும்.   வடமாகாண சபைக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ள போதும் 50 வீதமான அபிவிருத்திக்குகூட  மக்களுக்காக  ஆளும் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செலவழிக்கவில்லை.  

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிள்ளைகள் வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகள் இந்நாட்டில் எனவே எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்களே.   நீங்கள் என்னை நம்பலாம் உங்களை நான் என்றும் பாதுகாப்பேன் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல என்னுடன் இணையுங்கள் - என்றார்.