நோர்தன் பவர் நிறுவனம் தொடர்ந்து இயங்குகின்றது- தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள் இணைப்பு)
நோர்தன் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய் கசிவு தொடர்பில் பிரச்சினைக்குள்ளான இந்நிறுவனத்தை மூடும்படி எந்த அறிவித்தலும் வரவில்லை என்று இந் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தங்களது நிறுவனத்தினை மூடும் படி தமக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை அதனால் நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.கிராண்ட ஒரியன்டல் ஹோட்டலில் இன்று நடாத்திய விசேட ஊடகலியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்,
கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பகுதியாக அறிவிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்
யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பகுதியாக அறிவிக்குமாறு கோரி 4வது நாளாகவும் இன்றைய தினம் சுன்னாகம் சிவன்கோவிலுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.
கடந்த 4தினங்களுக்கு முன்னர் குறித்த கோரிக்கையினை முன்வைத்து வைத்தியர்கள் ஆரம்பித்த குறித்த உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாக இன்றைய தினம் தொடர்ந்த நிலையில் இன்றைய தினமும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நிறுவனத்தை நிரந்தரமாகவே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவையனைத்தும் எழுத்து மூலமான உறுதிமொழியாக எமக்கு வழங்கப்பட வேண்டும்.
அதுவரை எமது போராட்டம் தொடரும். அதேவேளை எமது போராட்டத்தை நசுக்குவதற்கு அரசியல்வாதிகள் பலர் முனைந்து வருகின்றனர்.எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்காவிடினும் எமது போராட்டத்தை நசுக்க முனைய வேண்டாம் என அவர்களிடம் நாம் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.
நேற்றைய தினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் கொழும்பில் சந்திப்புகளை மேற்கொண்ட போது அங்குள்ளவர்கள் இவ்வளவு பெரிய பிரச்சனையை எதற்காக இதுவரை காலமும் எமக்கு தெரியப்படுத்தவில்லை, என கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
யாழ்.மாவட்ட அரச அதிபரோ, அரசியல்வாதிகளோ, உள்ளூராட்சி மன்றமோ எவையுமே எமக்கு சரியான அறிக்கையினை அதுவரை காலமும் கையளிக்கவில்லை எனவும் அவர்கள் அக் குழுவிடம் கூறியுள்ளார்கள்.இங்குள்ள அரசியல் வாதிகள் தமக்கிடையில் முரண்பட்டுக்கொண்டு இருக்கின்றார்களே தவிர எமது பிரச்சனைகள் கூறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை என்றே எமக்கு தோன்றுகின்றது.
எமது பிரச்சனைகளுக்கு அரசியல் வாதிகள் தீர்வுகளை பெற்று தர முயலவில்லை எமது பிரச்சனைக்கு நாமே போராடி தீர்வினை பெற்றுக்கொள்ள முயலும் போது எமது போராட்டங்களை நசுக்குவதற்கு முயல்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.







