மணலாறு வாழ்வாதார காணிகள் விடுவிப்பு - மக்கள் குழு தோற்றம் (புகைப்படங்கள்)
மணலாறு நில அபகரிப்புத் தொடர்பில் ஒரு முக்கிய கட்டமாக, மக்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நேற்று மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பின் போது, பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த முடிவாக இக்குழு உருவாக்கம் இடம்பெற்றது.
மணலாறில் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரக் காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஒருங்கிணைந்த , ஒழுங்கு படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இம் மக்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று உருவாக்கப்பட்ட மணலாறு வாழ்வாதாரக் காணிகள் விடுவிப்புக் குழு பற்றி மேலும் தெரிய வருகையில்,
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முதற்கட்டமாக வடமாகாணசபையின் கடந்த வரவுசெலவுத்திட்டக் கூட்டத்தின் போது, வெலி ஓயா பிரதேச சபைக்கு வடமாகாணசபையால் நிதி ஒதுக்கப்படுவதை வாதாடி , உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வரை , இடை நிறுத்தியமைக்கு மக்கள் ரவிகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.
வடமாகாணசபை இவ்விடயத்தில் முக்கிய கவனம் எடுத்துள்ள இந் நிலையில் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அனைவரினதும் கருத்துப்பகிர்வுகளை அடுத்து, மணலாறில் உள்ள வாழ்வாதாரக்காணிகள் விடுவிப்புத் தொடர்பில் மக்கள் சார்பிலான ஒருங்கிணைந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி, தெற்கு , கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் மேற்கு,கிழக்கு ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களில் 30 பேரை உள்ளடக்கிய குழுவை மக்களே ஏகமனதாக தெரிந்தனர்.
மணலாறு வாழ்வாதாரக் காணிகள் விடுவிப்புக் குழு எனப் பெயரிடப்பட்டுள்ள இக்குழுவானது, மணலாறில் உள்ள தமிழர் வாழ்வாதார நிலங்கள் தொடர்பான மக்கள் சார்பு முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. அந்த நிலங்கள் முற்றாக விடுவிக்கப்படுவதற்கு தொடர்ந்தும் தன்னாலான முயற்சிகளை எடுப்பேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்களுக்கு உறுதியளித்தார்.
மணலாறில் உள்ள தமிழர் வாழ்வாதார நிலம் தொடர்பாக அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிற வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக தமிழர் அரசியலில் முக்கிய இடம்பெற்றிருந்த மணலாறு நில அபகரிப்பு விடயத்தில், இக்குழு உருவாக்கம் சிறப்பான தாக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)







