கூட்டமைப்பின் மனதை வெல்லாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது -வாசுதேவ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனதை வெல்லாது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியாது என்பதுடன் தேசிய சமத்துவத்தையும் கட்டியெழுப்ப முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய அரசின் தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று நடைபெற்றது. இந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக இடதுசாரி முன்னணி எதிரணியில் இருந்துகொண்டு அரசின் மக்கள் சார் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.குறிப்பாக வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காணிகளின் விவரங்களை புதிய அரசு திரட்டிவருகின்றது.இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். இதை கட்டாயம் செய்தாக வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனநாயக விழுமியங்களை பின்பற்றிய தலைவராவார். அவர் தேர்தல்களை நடத்தினார். ஏன், எதிர்ப்புக்கு மத்தியில் வடமாகாணசபைத் தேர்தலையும் நடத்தி னார்.எனவே, அவர் மீதான வீண் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனதை வெற்றி கொள்ளாமல், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண முடியாது. அதனை முதலில் செய்யவேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.








