தம்மீதான குற்றச்சாட்டுக்களை நோத்தன் பவர் கொம்பனி நிராகரித்துள்ளது
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நோத்தன் பவர் கொம்பனியின் கழிவு எண்ணெய் காரணமாக நிலத்தடி நீருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை குறித்த நிறுவனம் நிராகரித்துள்ளது.
குறித்த நிறுவனத்தினால் எரிபொருள் கழிவு அகற்றப்படுவதற்காக தோண்டப்பட்டுள்ள கிணறுகளுக்கும் குடியிருப்பு பிரதேசங்களுக்கும் இடையில் 3 கிலோமீற்றர் தூரம் இருப்பதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் பல்வேறு தரப்புக்களும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது நிறுவன கழிவு எண்ணெய்யால் நிலத்தடி நீரூக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறிவருவதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் நோத்தன் பவர் நிறுவனம் தமது பணிகளை ஆரம்பித்தது.இதன்போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டே நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் 15வருடங்களாக மின்சாரமின்றி இருந்த வீடுகளுக்கு மின்சார வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.இந்தநிலையில் தமது நிறுவனத்திடம் உரிய சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிகளும் உள்ளதாக நோத்தன் பவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிறுவன கழிவு எண்ணெய் காரணமாக குடாநாட்டின் குடிநீருக்கு பாதிப்பு என்று குற்றம் சுமத்தி நிறுவனத்தை மூடுமாறு கோரி இன்று சுன்னாகம் சிவன் கோயிலுக்கு முன்னாள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.








