Breaking News

அமைச்சரவை கொண்டுள்ள அவசரப் பொறுப்புகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துள்ளது. இதனோடு 11 இராஜாங்க அமைச்சர்களும் 09 பிரதியமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். 


கடந்த ஐ.ம.சு.மு. ஆட்சியில் இருந்த அமைச்சரவை ஒழுங்கு முறை மாற்றப்பட்டு இராஜாங்க அமைச்சுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.30 பேர் அடங்கிய அமைச்சரவையொன்றை அமைப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்னும் மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் சில தினங்களில் பூர்த்தியடைந்து விடும் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘மைத்திரிபாலனய’ (மைத்திரி ஆட்சி) என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் நடைமுறைச் சிந்தனைகள் அடங்கிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது.

அமைச்சரவைக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சு இலங்கைக்கு புதியதல்ல, 1987ம் ஆண்டு காலப்பகுதியிலும் இராஜாங்க அமைச்சு நடைமுறையில் இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.மக்களுக்கான பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு ஏதுவாகவே இந்த அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மைத்திரி ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று மாத காலங்களுக்கு மட்டுமே இந்த அமைச்சரவை தனது பணியை முன்னெடுக்கும். அதாவது, இதுவொரு தற்காலிக அமைச்சரவை என்பதே உண்மையாகும். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.குறுகிய காலம் என்றாலும் இந்த அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியில் நூற்றுக்கணக்கான அமைச்சுக்களையும் அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு மக்கள் பணிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்களென காட்டிக்கொண்டாலும், சுயநலமான போக்குகளும் சுய இலாப நோக்கங்களுமே முதன்மைப்படுத்தப்பட்டதேயொழிய, மக்களுக்கான சேவைகள் மந்த கதியிலேயே இருந்ததை நாம் அனுபவிக்க முடிந்தது.

ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எழுந்தமானமான அமைச்சுக்களால் இனவாதங்களும் மத மோதல்களுமே தலைதூக்கியதே தவிர அமைச்சு மட்டங்களில் வேறெதுவும் பெரிதாக முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.அதாவது அமைச்சுக்கள் இருந்ததே தவிர, அந்த அமைச்சுக்களுக்கும் அமைச்சர்களுக்கும் உரிய பணிகள் முன்னெடுக்கப்படவில்லையென்பதே உண்மையாகும்.

இதனாலேயே அரசியல்வாதிகளையும் அமைச்சர்களையும் மிக மோசமானவர்கள் என மக்கள் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆகவே, கடந்த கால ஆட்சியினரின் குறுகிய அரசியல் நோக்கங்களுடனான செயற்பாடுகளை மக்கள் ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு மிகவும் தெளிவாகவே எடுத்துச் சொல்கின்றன.

இதனை படிப்பினையாகக் கொண்டு மைத்திரி ஆட்சியில் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய அமைச்சரவை திறம்படச் செயற்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள தெளிவான ஆணையை புரிந்து கொண்டு சகல அமைச்சர்களும் களப்பணி செய்வதே நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்டும் “அமைச்சர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ளும் போதுதான் மக்கள் எம்மீது கொள்ளும் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதனால் பொதுமக்களின் மனதை அறிந்து புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதேவேளை இன்னுமொரு விடயத்தையும் அவர் எடுத்துரைத்தார். “புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும் மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும் இருப்பதோடு, எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது பதவியையும் அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக வேண்டும்” என்றும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

உண்மையில் ‘மைத்திரி பாலனய’ 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசியலமைப்பை மாற்றியமைப்பதே இலக்காக இருக்கிறது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றி பாராளுமன்றத்துடன் இணைந்த நீதிமன்றத்துக்குக் கட்டுப்படும் அரச தலைமைத்துவமாக ஜனாதிபதிப் பதவியை மாற்றுவதற்குரிய அரசியலமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவதற்கு வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக தேசிய அரசாங்கம் முழுமையாக செயற்படும்.

ஆகவே, உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அமைச்சரவை மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுப்பதோடு தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.தேர்தலில் தோல்வி கண்டவர்கள் இனவாதத்தைப் பரப்பி நாட்டின் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

புதிய அமைச்சரவையின் செயற்பாடுகளும் பணிகளும் இப்படியான செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.