Breaking News

ஆட்சி மாறியிருக்காவிடின் பல பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள் - ரஞ்சன் ராமநாயக்க

கடந்த தேர்தலில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிட்டால் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பர். எனினும் பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் நேர்மையான செயற்பட்டினால் அது தடுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை தேர்தலின் பின்னரான வன்முறைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளைபிரேரணை மீதான விவாவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இங்கு மேலும் கூறுகையில்;

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மனித உரிமைகள் குறித்து பேசுவது போன்றும் படுகொலைகள் பற்றி ஹிட்லர் குரல் கொடுப்பது போன்றுமே இன்று தேர்தலின் பின்னரான வன்முறைகள் தொடர்பில் பிரேரணை கொண்டு வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய பிரேரணையைக் கொண்டு வந்து சமர்ப்பித்து உரையாற்றுபவர்களின் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடந்தவை பற்றி நாடே அறிந்துள்ளது.

எதிர்க்கட்சி வரிசைகளில் அமர்ந்திருக்கின்றவர்களில் பலர் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான சட்டம் சரியாக செயற்படும். முதலில் கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு பின்னர் சிறைகளுக்கே அனுப்பி வைக்கப்படுவர்.

அத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கப்போவதாக இங்கு சிலர் கூறித் திரிகின்றனர். நிச்சயமாக அவர்கள் வெலிக்கடையிலும் போகம்பறையிலும் ஆட்சியமைக்கத்தான் போகின்றனர்.எனவே மைத்திரி நிர்வாத்துடன் விளையாடிக்கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேல்தல் நடைபெற்ற மறுதினத்தில் 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்க வேண்டும். ஆனாலும் அது இடம்பெறவில்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இது தடுக்கப்பட்டது.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட படுகொலைகள் இடம்பெற்றிருக்கும். எப்படி இருப்பினும் பொலிஸ் மா அதிபர், இராணுவத்தளபதி மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்டோரின் நேர்மையான செயற்பாடுகளால் எல்லா அனர்த்தங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.