கோத்தாபயவுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள்! வாய் திறக்கிறார் ராஜித
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில் மேலும் பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி சோமரத்ன திஸாநாயக்க உட்பட நான்கு பேருக்கு வெளிநாடு செல்ல காலி நீதிமன்றம் நேற்றைய தினம் விதித்த தடை உத்தரவு தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அவன்ட் கார்ட் ஆயுத நிறுவனத்தின் செயற்பாடுகள் மாத்திரமன்றி, முன்னாள் அப்பலோ வைத்தியசாலை என்றழைக்கப்பட்ட தற்போதைய லங்கா வைத்தியசாலை நிறுவனம் உட்பட மேலும் பல நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்களின் போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித்த கூறுகின்றார்.
அவன்ட் கார்ட் ஆயுத நிறுவனத்தை நிறுவியது மற்றும் அதனை நடத்தியது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று அரசாங்கத்திலுள்ள சிலரே தெரிவித்துள்ள போதிலும்
அவ்வாறான அறிவிப்புக்களை விடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கும் அமைச்சர் ராஜித்த அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறுகின்றார்.
கோட்டாபயவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு மாத்திரமே என்ன நடக்கின்றது என்ற உண்மை தெரியும் என்று குறிப்பிடும் அமைச்சர் எனினும் சில அதிகாரிகள் அழுத்தங்கள் காரணமாக தமக்கு தொடர்பில்லாத விடையங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டு வருவதாகவும், அவர்களில் பலர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் பதவிகளுக்கு வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.