Breaking News

வடக்கில் கூட்டமைப்பின் வழிகாட்டலிலேயே நான் செயற்பட்டு வருகின்றேன் - விஜயகலா

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். வடக்கில் கூட்டமைப்பினரின் வழிகாட்டலிலேயே நான் செயற்பட்டு வருகின்றேன் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு போதியளவு நிதி வழங்கப்பட வேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் வடமாகாண சபைக்கு உரிய வகையில் நிதி வழங்கப்படவில்லை. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் அதற்கான நடவடிக்கை இன்னமும் எடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் விரைந்து அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் இளவாலை யஹன் றியரசர் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கூட நிலையத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் த.குரு குலராஜா, கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதிய மைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தெரிவிக்கையில்,

வடக்கில் பாடசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவுள்ளது. வலிகாமம் வடக்கு அதிபாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடேஸ்வராக் கல்லூரி, மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் உட்பட ஏழு பாடசாலைகள் வரையிலுள்ளன. 

அந்தப் பாடசாலைகளை மீட்டுத்தர கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலாலி கலாசாலை மூடப்பட்டுள்ளது. 14 கற்கை நெறிகளுடன் செயற்பட்டு வந்த இந்தக் கலாசாலை தற்போது ஒரு கற்கை நெறியுடன் திருநெல்வேலியில் செயற்பட்டு வருகின்றது. இந்தக் கலாசாலையையும் மீளவும் இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

குடாநாட்டில் பாடசாலைகளுக்கு அருகில் போதைவஸ்து விநியோகிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருவதாக தெரிகின்றது. இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தற்போது கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவது பாராட்டத்தக்கது. வடக்கைப் பொறுத்தவரையில் நாம் கூட்டமைப்புக்கு வழி காட்டவில்லை அவர்களின் வழியிலேயே நான் நடக்கின்றேன். 

இந்த பாடசாலையில் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான விஞ்ஞான ஆய்வுகூடம் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. இதற்கான வசதிகள் செய்துகொடுக்கப் பட வேண்டும் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.