தமிழர்கள் இழந்தவை பெற்றுக் கொடுக்கப்படும் - சுவாமிநாதன்
வட மாகாண தமிழ் மக்கள் கடந்த 40 வருடங்களாக இழந்த அத்தனை உரிமைகளையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பார்கள் என, மீள் குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மானிப்பாய் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
மீள்குடியேற்றம், அரசியல் உரிமைப்பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு உள்ளமையினை நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம். அதனை மறுக்கவில்லை. அவற்றை நிச்சயம் தீர்ப்போம் நம்பிக்கை வையுங்கள் .
அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே கடந்திருக்கின்றது. எனவே எமக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குங்கள். தற்போதே மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். குறிப்பாக வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக படையினர் மற்றும் ஆளுநர் ஆகியோருடன் பேசியிருக்கின்றேன்.
இதனடிப்படையில் மூன்று வாரங்களுக்குள் வலி. வடக்கில் 1000ம் ஏக்கர் நிலத்தையும், வலி. கிழக்கில் 200 ஏக்கர் நிலத்தையும் மொத்தமாக 12000 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். தொடர்ச்சியாக ஆறு மாதம் தொடக்கம் ஏழு மாதங்களுக்குள் முழுமையாக படையினர், அத்தாட்சிப்படுத்தாத அத்தனை நிலங்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
நான் வலி. வடக்கு பகுதிக்குச் சென்று பார்த்திருக்கின்றேன். விவசாயம் செய்வதற்கு தங்கமான ஒரு இடம் இத்தனை வருடங்கள் பயனற்று கிடந்திருக்கின்றமை மிக வருத்தத்திற்குரியதாகும். எனவே மீள்குடியேற்றம் தொடர்பில் நாங்கள் முழுமையான நடவடிக்கை எடுப்போம். மேலும் அரசியல் தீர்வு விடயத்திலும் நாம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்போம், என்றார்.