Breaking News

ஜெயக்குமாரி இன்று விடுதலை!

சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் மாதம் ஒரு தடவை சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் ஜெயக்குமாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது,

ஜெயக்குமாரி காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றில் பங்கேற்று மனித உரிமை மீறல்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இவருடன் கைது செய்யப்பட்டிருந்த பத்மாவதி மகாலிங்கம் என்ற 64 வயதுடைய பெண்மணியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலி சந்தேக நபா்கள் சிலரை கிளிநொச்சி தா்மபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தாா் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு பெப்ரவாி 13 ஆம் திகதி ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டாா். அவாின் மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டு பின்னா் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கிளிநொச்சி நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்டாா்.

இந்த நிலையில் தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கு தாயாா் பங்கு கொள்வதற்காக பிணையில் விடுதலை செய்யுமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திக்கு கடிதம் எழுதியிருந்தாா். ஆனாலும் அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடந்த 6ஆம் திகதி பிணை வழங்குவது தொடா்பான வழக்கு விசாரணை நடைபெறவில்லை. அந்த விசாரணை இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று முற்பகல் புதுக்கடை நீதி மன்றத்தில் அந்த விசாரணை நடைபெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி இரத்னவேல் உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பங்கேற்றிருந்தனா்.