Breaking News

இலங்கை பிரதமரின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு!

எல்லை தாண்டினால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்படுவார்கள் என இலங்கை பிரதமர் வெளியிட்ட கருத்துக்கு இந்திய மத்திய அரசின் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்கள் பிரச்சினை வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதால், மனிதாபிமான ரீதியில் அதனை அணுக வேண்டுமென இலங்கை விஜயத்தின் போது பிரதமரிடம் வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் பிரச்சினையை தொழில்நுட்ப ரீதியில் அணுகுவது தவறானது என எடுத்துரைத்ததாகவும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். மீனவர்கள் மீது இருதரப்பு கடற்படையினர் பரஸ்பர தாக்குதல்களை நடத்துவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தாம் வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

தம்மால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் சுட்டிக்காட்டியுள்ளார். இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு முன்னர், இடைக்கால ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.