மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை - மங்கள
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இலங்கையில் மனித உரிமை தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டு மக்களும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம், நாட்டு மக்களின் பேச்சுரிமை, ஜனநாயகம், ஊடக சுதந்திரம், உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாக்குமெனவும, இனப்பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமஉரிமை அளிப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறியதாகவும் தெரிவித்துள்ளார். உலக மனித உரிமை அமைப்புகள், மனித உரிமைகள் ஆணையாளர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்து உதவ வேண்டும் எனவும் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென குறிப்பிட்ட அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ள மனிதவுரிமை சட்டத் திட்டங்களை ஸ்ரீலங்காவிலும் முழுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நம்பகமான உள்நாட்டு விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்கள் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக இந்த மாகாணங்களுக்கு சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1000 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விடுவிக்கப்பட்ட காணியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.








