இலங்கையில் இந்தியா தலையிடுகின்றது! சீனா குற்றச்சாட்டு
தமிழர்கள் அதிகம் வாழும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விஜயம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று, சீனாவின் சிந்தனையாளர் குழாமின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் இலங்கை, மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இந்தியா ஊக்கப்படுத்திவருவதாகவும் Liu Zongyi என்ற அந்த அதிகாரி குற்றஞ்சாட்டினார்.
சீனாவின் அனைத்துலக கற்கைகளுக்கான ஷங்காய் நிறுவகத்தின், உதவி ஆராய்ச்சியாளரான, லியூ சொங்யி, குளோபல் ரைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
“மோடியின் பயணம், சீனா உள்ளிட்ட நாடுகளின் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அவற்றில் பெரும்பாலானவை, சீனா முதலீடு செய்த திட்டங்கள் நிறுத்தப்பட்ட போது, புதுடெல்லியில் கை ஓங்கியுள்ளதாக நம்புகின்றன.
மோடி தனது இலங்கை விஜயத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கியதானது, உண்மையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில், இந்தியாவின் தலையீட்டையே வெளிப்படுத்தியுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.