Breaking News

வலி வடக்கு காணிகளை விடுவித்தல்! உண்மை நிலை என்ன?

வலிகாமம் வடபகுதியிலுள்ள காணி விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் சாதகமாகக் கூறுகின்றது. ஆனால், நேரில் செல்லும் போது இராணுவம் மக்களை அனுமதிக்க மறுக்கின்றது. இதனால், வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரையில் உண்மை நிலை என்ன என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளார்கள்.

விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் யரழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதையிட்டு மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

வலிகாமம் வடக்கில் 100 நாட்களில் 1100 ஏக்கர் காணியை விடுவிக்கவிருப்பதாக கூறப்பட்டது. மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அமைவாகவே இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இப்போது 70 நாட்கள் நிறைவடைந்த போதும் சிறியளவு காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.

பெரும்பகுதி விடுவிக்கப்படாமலுள்ளது. மிகுதியாகவுள்ள 30 நாட்களில் விடுவிக்கப்படுவதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வளலாயில் 233 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இங்கு மட்டும் 418 ஏக்கர் காணி இப்போதும் இராணுவம் வசமுள்ளது.

வசாவிளானில் 144 ஆவது கிராம சேவகர் பிரிவில் சுமார் 300 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரும் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு படையணியுள்ளது. இராணுவக் குடும்பங்கள் அங்கிருப்பதாக வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவிக்கின்றார்கள். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு இராணுவம் தடையாக இருப்பதற்கு இதுதான் காரணம்.

இந்நிலையில் புதிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் வேலையை இராணுவம் மேற்கொள்கின்றது.. நேரில் சென்ற பலர் இதனை அவதானித்துள்ளனர். புதிய பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கு இராணுவம் முற்படுகின்றதா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்திருக்கின்றது. அரசாங்கம் விடுவிப்பதாக உறுதியளித்துள்ளதால் மக்கள் இதனை நம்பியிருந்த நிலையில் சிறிய பகுதியே விடுவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்ற மக்கள் இதனால் கடுமையாக அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.

252 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் சொற்ப நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. கலட்டி தரை மற்றும் தோட்டக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் மீளக் குடியேறுவதற்கு குடியிருப்பு பகுதிகள் விடுவிக்கப்படவில்லை.

அச்சுவேலி ஒட்டகப்புலத்தில் படையணித் தலைமையகம் உள்ளது. மறுபக்கம் பலாலி முகாம் உள்ளது. இதற்கு இடைப்பட்ட ஒட்டக புலத்தில் 50 பேர் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மீள் குடியமர்வு கடினம் . இந்தப் பகுதியில் குடியேறுவது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. அருகேயுள்ள முகாம்களில் உள்ள படையினர் வெளியேறினால் மட்டுமே மக்கள் அச்சமின்றி வசிக்க முடியும்.

நேற்று முன்தினம் வசாவிளான் கிழக்கு விடுவிக்கப்பட்டதை பார்ப்பதற்காக கிளிநொச்சி, மன்னார் மற்றும் திருகோணமலையிலிருந்து மக்கள் வந்தனர். எனினும் அவர்களது காணிகளைப் பார்க்க முடியாதவாறு படையினர் தடுத்ததால் திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் காணிகளை மக்களிடம் கையளிப்பதற்காகவென பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று யாழ்ப்பாணம் செல்லவிருக்கின்றது. அரசாங்கம் சொன்னது போல காணிகள் மீளக் கையளிக்கப்படுமா? அல்லது இராணுவத் தடைகள் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!