புலிகளை விடுதலை செய்யும் அரசு எனது பாதுகாப்பை குறைத்துள்ளது! மஹிந்த புலம்பல்
தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் எனது பாதுகாப்பை குறைத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது. இந்த அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதனால் பாரியளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்ழுகுவிற்கு அடிக்கடி செல்வதனை தவிர வேறு எதனையும் செய்யவில்லை. மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பிலான விசாரணைகளில் சட்டத்தரணிகள் மட்டும் ஈடுபடுத்துவதில் பயனில்லை. துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
நான் தற்போது ஓய்வில் இருக்கின்றேன். என்றாவது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்வேன் என மஹிந்த தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.