மஹிந்தவை ஓரங்கட்டும் மோடி!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மட்டும் அவர் சந்திக்கமாட்டார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தப் பயணத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என தெரியவந்திருக்கின்றது.
இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 30 வருடங்களுக்குப் பின்னர் முதல்தடவையாக இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருகைவருவதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1987 இல் இலங்கைக்கு வந்திருந்தார்.
அதன்பின்னர் மன்மோகன்சிங் இலங்கை வந்திருந்த போதிலும், அது இரு தரப்பு உறவை நோக்கமாகக் கொண்டதாக இருக்கவில்லை. சார்க் மாநாட்டில் பங்குகொள்வதற்காகவே அவர் இலங்கை வந்திருந்தார்.
13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு வரும் மோடி, தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்துவைப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய கலாசார மண்டபத்துக்கான அடிக்கல்லையும் நாட்டுவார். அத்துடன் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் மக்களுக்குக் கையளிப்பார். இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் செல்வது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோடி கொழும்பில் சந்திப்பார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரணை யாழ்ப்பாணத்தில் சந்திப்பார். இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மட்டும் அவர் சந்திக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.