மகிந்தவின் மருமகன் காணாமற்போனார்!
ரஸ்யாவில் இலங்கை தூதுவராக இருந்தவரும், மகிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்கவைக் காணவில்லை என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ரஸ்யாவில் இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக உக்ரேனிய ஜனாதிபதி , இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா,
“அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ரஸ்யாவுக்கான தூதுவராக பணியாற்றிய உதயங்க வீரதுங்க, ரஸ்யாவில் இலங்கை தூதரகத்துக்கு அருகிலேயே தேனீர் வியாபாரமும் நடத்தி வந்தவர்.
அண்மையில் புதிய அரசாங்கத்தால் அவர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் நாடு திரும்பியதாகத் தெரியவில்லை. இலங்கை வெளிவிவகார அமைச்சினாலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காணாமல்போயிருக்கிறார். உலகில் எங்கிருக்கிறார் என்றும் கூறமுடியவில்லை. அவரைக் காணவில்லை.
முன்னாள் ஜனாதிபதி நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்க தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உதயங்க வீரதுங்க 8 ஆண்டுகளுக்கு மேல் ரஸ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளார். சாதாரணமாக மூன்று ஆண்டுகள் தான் ஒருவர் ஒருநாட்டில் தூதுவராக இருப்பார்.
ஆனால், இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்திற்காக, இவருக்கு அதனையும் தாண்டிய வாய்ப்பு கிடைத்திருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








