“கோத்தா முகாம்” குறித்து விசாரிக்க அரசு தயங்குவது ஏன்? சுரேஷ் கேள்வி
கோத்தா முகாம், திருமலையில் நடைபெற்ற முன்னைய படுகொலைகள் தெஹிவளையிலிருந்து கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள மாணவர் விவகாரம் ஆகியவற்றின் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டுமாயின் புதிய அரசாங்கமானது இவற்றை மீள் பரிசீலனை செய்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை இரகசிய கடற்படை முகாம் சம்பந்தமாகவும் முன்னைய படுகொலைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“திருகோணமலை கடற்படைத்தளத்தில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் கோத்தா தடுப்பு முகாம் குறித்து எனக்கு கிடைத்த உண்மைத் தகவலின் அடிப்படையில் நான் இத்தடுப்பு முகாம் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.
இது சம்பந்தமான எந்த விசாரணையையும் அரசாங்கம் செய்யத்தயாராகவில்லை. பதிலாக என்ன செய்திருக்கிற தென்றால் கடற்படைத்தளபதியை அழைத்து திருகோணமலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளதா என விசாரித்துள்ளார்கள். அதற்கு பதில் அளித்த தளபதி அப்படியொரு முகாம் இருக்கவுமில்லை. அப்படியொரு சம்பவம் நடக்கவுமில்லையென்று கூறியிருக்கிறார்.
இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் இப்படியொரு சம்பவம் நடைபெற வில்லையென பாராளுமன்றத்தில் கூறினார். இவ்வாறு தான் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் என்னால் மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையிலேயே முன்வைத்தேன். கோத்தா முகாம் பற்றி என்னால் கூறப்பட்ட குற்றச்சாட்டானது ஒருவர் இருவர் பற்றியதல்ல, ஒட்டுமொத்தமாக 700 பேர் சம்பந்தப்பட்டது. இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஏன் அரசு தயங்குகிறது என்று தெரியவில்லை. சாதாரண ஒரு விடயமாக தட்டிக்கழிக்கப்படுகிறது. இது பாரதூரமான விடயமாகும்.
திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்கள் மற்றும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டர்கள் பற்றிய கொலைகள் சம்பந்தமாக நானும் இரா.சம்பந்தனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து முறையிட்டோம். குறித்த கொலைகள் சம்பந்தமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இரு வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோமென்று அவர் கூறினார். அதே ஜனாதிபதி 5 மாணவர்களின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் விஷேட அதிரடிப்படையினர் எனக்கூறினார்.
இந்த மாணவர்களின் படுகொலை சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது முன்னாள் ஜனாதிபதி முதல் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனாலும் கூட அப்படுகொலை சம்பந்தமாக சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. போதிய சாட்சியங்கள் இல்லையென தட்டிக் கழிக்கப்பட்டதுடன் இதற்கென நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் இடையில் தனது விசாரணையை நிறுத்திக்கொண்டது.
முன்னாள் ஜனாதிபதி ஊழல் புரிந்துள்ளார் எனக் கூறும் அரசாங்கம் இந்த விசாரணைக்கு இந்தியா மற்றும் உலகவங்கி ஆகியவற்றின் உதவியை நாடியுள்ளது. ஆனால் எம்மால் சுட்டிக்காட்டப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு அரசாங்கம் ஏன் மறுக்கிறது. என்று புரியவில்லை. இதிலிருந்து ஒன்று புரிகிறது நாம் தெரிந்திருக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என்பதாகும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்ன கொடவே பல கொலைகளை செய்ய தனக்கு உத்தரவிட்டார் என கடற்படையைச் சேர்ந்த லெப்ரினன் கோமாண்டரான நிலாந்த சம்பத் முனசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்கினார் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதே போன்றே தெஹிவளையிலிருந்து கடத்தப்பட்ட 5 மாணவர் சம்பந்தமான விசாரணையின்போது கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் 5 மாணவர்களை கடத்துவதற்கு தனக்கு கட்டளையிட்டது கடற்படைத்தளபதி வசந்த கரன்னகொடவே என்று இதிலிருந்து ஓர் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. மேற்படி கடற்படைத் தளபதி பல கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளார் என்பது நீதிமன்றிலேயே கூறப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும்கூட அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரிக்கப்படவில்லையென்பது எமக்குபுரியாத புதிராகவேயுள்ளது.
இந்த சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கிறபோது திருகோணமலை கடற்படை இரகசியமுகாமென்பது இப்படிப்பட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இந்த தேவைகளுக்காகவே கோத்தா முகாம் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது என்பதேயுண்மை ஆனால் அந்த முகாம் இன்று இல்லாமல் இருக்கலாம். இந்தாலும் திருகோணமலை கடற்படை முகாமானது ரகசியமான கொலைகளுக்கும் கடத்தல்க ளுக்கும் மறைத்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த முகாமென்பதேயுண்மை.
இந்த உண்மைகள் மேலும் துலக்கப்பட வேண்டு மானால் ரவிராஜின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடற்படை தளபதிகள் ஆகியோரை முறையான விசாரணைகள் செய்வதன் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும். நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம் என்று கூறிவரும் இன்றைய அரசாங்கமானது நாட்டில் நடைபெற்ற இவ்வகை அநீதிகளை கண்டு பிடிக்க முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி ஜனநாயகம் என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ்மக்களுக்கும் உண்டு என் பதை அரசு நிரூபித்துக்காட்ட வேண்டும்” என பிரேமச் சந்திரன் மேலும் தெரிவித்தார்.








