Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க சூழ்ச்சி! மகிந்த குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றாக அழித்து விடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சி செயற்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.  2011 மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அவற்றின் பதவிக்காலத்தை நீடித்து, பொதுத் தேர்தலின் பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்துவது என முந்தைய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இது குறித்து ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு அவற்றை விசேட ஆணையாளர்களின் நிர்வாகத்தின் கொண்டு வரும் சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், 278 உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பாரிய ஆபத்துக்குள் தள்ளப்பட்டு விடும்.

உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்படுமாயின், அதனை ஜனநாயக தீர்மானம் என்று எம்மால் பாராட்ட முடியும். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சியில் உள்ளூராட்சி சபைகளை கலைத்த பின்னர், அவர்கள் தமக்கு ஆதரவான ஆணையாளர்களை நியமிக்க போவதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால், இந்த முக்கியமான அரசியல் விடயம் குறித்து அனைவரும் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.