கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கடல் விழுங்குகிறது! சீன நிறுவனம் கவலை
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரண்டு வாரங்கள் தொடர்ந்து இடைநிறுத்தினால், ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளை கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று சீன கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்த திட்டத்துக்கான அனுமதியை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று திட்டத்தின் பிரதான ஒப்பந்த நிறுவனமான சிஎச்ஈசி கொழும்புத் துறைமுக நகர நிறுவனம் கோரியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இந்த திட்டம் இடைநிறுத்தப்படும் வரை- முழுத் திட்டத்தில் 13 வீதப் பணிகள் முடிந்து விட்டன என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கடல்சார் திட்டமொன்றை இடைநடுவில் நிறுத்தினால், அதை மீளத் தொடங்குவதற்குள் கடல் சேதப்படுத்தி விடும். ஏற்கனவே இந்த திட்டத்துக்காக பாறைகளால் அமைக்கப்பட்ட 150 மீற்றர் நீளமான பாதுகாப்புச் சுவர், கடலில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
நாளைக்கே இந்த திட்டத்தை ஆரம்பிக்குமாறு அனுமதி கொடுக்கப்பட்டாலும் கூட, இதனை கைவிட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாது.” என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.