வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்னையை தீர்க்க 20 நாள் செயற்திட்டம் அமூல்
வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல், சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள், கிராமிய மீனவர் அமைப்புக்கள் தொடர்பிலான பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து இலங்கை-இந்திய மத்திய அரசுகளிற்கு எழுத்து மூலம் ஆவணப்படுத்தும் விசேட செயற்திட்டம் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மாகாண மீன்பிடி அமைச்சர் தலைமையில் கூட்டங்கள் கூட்டப்பட்டு இரு வாரங்களிற்குள் இருநாட்டு அரசுகளிடமும் ஆவணப்படுத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலினால் இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணமே அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது. இதே போல் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலும் வட மாகாணத்தில் தற்போதும் அதிகரித்த நிலையிலையே காணப்படுகிறது.
இப் பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திலுள்ள மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தைகளை நடாத்தவுள்ளொம். இப் பேச்சு வார்த்தையில் எட்டப்படுகின்ற முடிவுகள் மற்றும் தீர்வுகளை வைத்து அறிக்கையொன்றைத் தயாரிக்க உள்ளோம்.
அந்த அறிக்கையில் இந்திய இழுவைப் படககுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், உள்ளுர் மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடிகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் காலத்தில் அரசியல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டள்ள கிராமிய மீன்பிடி அமைப்புக்கள் ஆகியன உள்ளடக்கப்படவுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மத்திய கடற்தொழில் அமைச்சு, மத்திய கடற்தொழில் நீரியியல் வளத் திணைக்களம், கடற்படை, வடக்கு மாகாண கடற்தொழில் அமைச்சு ஆகியன கலந்து கொண்டிருந்தன. இச் சந்திப்பில் வடக்கு மாகாணத்திலுள்ள மினவர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி அவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளார்.
இப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வடக்கு மாகாண அமைச்சிற்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்குள்ள மினவர்களின் நாளாந்த மற்றும் நீண்ட காலப் பிரச்சனைகளை மாகாண அமைச்சே தலையிட்டு தீர்த்து வைப்பதற்கான செயற்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்க உள்ளோம்.
கடந்த காலங்களில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் இரு அரசுகளின் உயர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்திருந்தன. எமது விசேட செயற்திட்டத்தின் மூலம் கிராமிய மட்டத்திலுள்ள மீனவர்களின் பிரச்சனைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு அப் பிரச்சனைகள் உயர் மட்டத்தில் நடைபெறுகின்ற சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்படும். அதனூடாக அப்பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்த எம்மாளான முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம் என்றும் டெனீஸ்வரன் மேலும் தெரிவித்தார்








