Breaking News

மஹிந்த வடக்கு மாகாணத்தை கணக்கெடுக்கவில்லை. - வடக்கு முதல்வர்

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த மஹிந்த தலைமையிலான அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு விசேட தேவைகள் காணப்பட்ட போதிலும் அவற்றை கருத்திலெடுக்காது ஏனைய மாகாணங்களை போல் வடக்கு மாகாணத்திற்கும் உதவித்திட்டங்களினை வழங்கியிருந்தது என வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு பல்தேசிய கம்பனிகளும் வெளிநாட்டவர்களும் முன்வர வேண்டுமெனவும் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களை விட விசேட தேவையிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.திருமறைக்கலாமன்றம் அருகாமையில் உள்ள ஜூப்ளி ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் புனரமைப்புச்செய்யப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுக்காலை பத்து மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கில் மகப்பேறு சம்பந்தமாக திருப்திகரமான நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது. இவ் ஆரம்ப சுகாதார நிலையம் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியன்று அடிக்கல் நாட்டப்பட்டு அப்போதைய யாழ்.மாநகர முதல்வர் சாம்லூயி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இக்குழந்தை சிகிச்சை நிலையத்தினால் யாழ்.நகர மக்கள் மற்றும் குருநகர் மக்கள் பெரிதும் நன்மைகளை பெற்று வருகின்றனர். யுத்த காலத்தின் போது சேதமடைந்த இவ் சிகிச்சை நிலையத்தினை ஐ.ஓ.சி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினர் தமது நிதியுதவியில் புனரமைப்புச்செய்துள்ளனர்.

குறித்த நிறுவனம் யாழ்.மக்களின் நன்மை கருதி மேற்கொண்ட மூன்றாவது திட்டமாகும். இதே போல் சமய நிறுவனங்கள், பல்தேசிய கம்பனிகள், வெளிநாட்டவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களிற்கான அனைத்து விதமான உதவிகள் மற்றும் செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.