570 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டன
570 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றி முடிக்கப்பட்டுள்ளது. மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களை நாளை வெள்ளிக்கிழமை, அரச அதிபர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.
அதன் பின்னர் மக்கள் பதிவு செய்யப்பட்டு மீள்குடியமர்வு நடவடிக்கைகள் நடைபெறும். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான, மீள்குடியேற்ற செயலணியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் முடிவில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய ஆயிரத்து நூறு ஏக்கர் நிலப்பரப்பு வலி.வடக்கில் முதல்கட்டமாக விடுவிக்கப்பட தீர்மானிக்கப்பட்டது. அதில் 430 ஏக்கர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 570 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பது தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னர் மாவட்டச் செயலகத்தில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் மீள் குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ், அரச அதிபர் நா.வேதநாயகன், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இராணுவத்தினர், எஞ்சிய 570 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றும் பணிகளை செய்து முடித்துள்ளனர். அவ்வாறு மதிவெடி அகற்றப்பட்டுள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்படவில்லை. அதனை, அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் தலைமையிலான குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை நேரில் சென்று அடையாளப்படுத்தவுள்ளனர். அதன் பின்னரே, அந்தப் பிரதேசத்தில் மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு மேற்கொள்ளப்பட்டு மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவுள்ளது.
.jpg)







