முதல்வர் விக்கினேஸ்வரனை எவரும் விமர்சிக்க முடியாது
அதி வணக்கத்துக்குரிய எஸ்.ஜெபநேசன் அவர்கள் சொன்ன கதை இது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் (முன்னையவர்) ஒருநாள் தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
பாலம் ஒன்றில் பயணிக்கும் போது காரை நிறுத்துமாறு திருமதி புஷ் கூறினார். கார் நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து இறங்கிய திருமதி புஷ் சிறிது தூரம் நடந்து சென்று அப்பகுதியில் பெயின்ட் அடித்துக் கொண்டு நின்ற ஒருவருடன் கதைத்துவிட்டு திரும்பினார்.
காரில் ஏறியபோது பெயின்ட் அடிக்கும் நபர் யார் என்று ஜனாதிபதி புஷ் தன் மனைவியிடம் கேட்டார். அவன் என்னுடைய முன்னாள் காதலன் என்று மனைவியின் பதில் இருந்தது. தன்னைச் சுதாகரித்துக்கொண்ட ஜோர்ஜ் புஷ் இந்த நாட்டு ஜனாதிபதியின் மனைவி என்பதில் இப்போது நீ பெருமை அடைவாய் அல்லவா? என்றார்.
அதற்கு திருமதி புஷ், பெயின்ட் அடிப்பவனை நான் கட்டியிருந்தால் அவன்தான் இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பான் என்று பதில் அளித்தார். இந்தக் கதைக்குள் திருமதி புஷ்´ன் ஆற்றலால் தான் அவரின் கணவர் ஜனாதிபதி ஆனார் என்பது தெரியப்படுத்தப்படுகின்றது. திருமதி புஷ் கூறியதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது பற்றி நாம் பகுப்பாய்வு செய்ய விரும்பவில்லை.
ஆனால், சிலருக்கு தனிப்பட்ட ஆளுமை, செல்வாக்கு உண்டு என்பதை மட்டும் இங்கு ஏற்றுத் தான் ஆக வேண்டும். இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, தமிழகத்தில் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாதுரை, எம்.ஜி.இராமச்சந்திரன், தற்போதைய இந்தியப்பிரதமர் மோடி ஆகியோர் கட்சி என்பதற்கு அப்பால் அவர்கள் மீதான மக்களின் விருப்பு அவர்களை பதவியில் இருத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதாக்கட்சியில் போட்டியிட்டதால்தான் வெற்றிபெற்றார் என்று எவரும் வாதிட முடியாது. மோடி வேறொரு கட்சியில் நின்று போட்டியிட்டிருந்தாலும் அவரே பிரதமராகியிருப்பார். இது போன்ற ஒரு நிலைமை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் உண்டு.
வடக்கின் முதல்வராக விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்திருந்தனர். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை விக்னேஸ்வரன் பெற்றுக்கொள்வதற்குள் அவர்மீது மக்கள் கொண்ட விருப்பே காரணம் எனலாம்.
எனவே, எங்களால்தான் விக்னேஸ்வரன் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடுவது அவ்வளவு பொருத்தமானதன்று. இப்போது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான அரசியல் தலைமையை உருவாக்கக் கூடிய சக்தி விக்னேஸ்வரனுக்கே உண்டு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான அரசியல் தலைமையை உருவாக்கும் சக்தி முதல்வர் விக்னேஸ்வரனுக்கு இருக்கின்ற போதிலும் அவர் அப்படியான சிந்தனையை கொண்டிருக்கமாட்டார் என்பதற்காக அவரை எப்படியும் விமர்சிக்கலாம் என விமர்சிப்பது மடமைத்தனம். இருந்தும் கூட்டமைப்பிற்குள் இருக்கக் கூடிய ஒரு சில முக்கிய தலைகள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரசாரங்களை பொது மேடைகளில் செய்து வருகின்றனர்.
இத்தகைய விமர்சனங்கள், பேசுபவர்களைத் பாதிக்குமே அன்றி அது முதல்வரைப்பாதிக்காது என்பது நிறுத்திட்டமான உண்மை. அதேநேரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுடன் ஒருபோதும் முரண்பட்டதாக தெரியவில்லை.
ஆக, அறநெறிக்கருத்துக்களோடு தமிழர்களுக்கான அரசியல் நியாயங்களை முன்வைக்கும் முதல்வர் விக்னேஸ்வரனின் உபாயம் அரசியல்வாதிகளுக்குக் கடுப்பாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு அதில் நிறையவே உடன்பாடு உண்டு என்பது உணரப்படவேண்டும்.








