ராஜபக்ஷர்கள் கள்ளர்கள் இல்லை! மஹிந்த
ராஜபக்ஷர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அவற்றுக்கு முகம் கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷர்கள் கள்ளர்கள் இல்லை என்றும் கூறினார்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு மட்டுமட்டுமல்ல நாமல் ராஜபக்;ஷ ஏன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். அந்த குற்றச்சாட்டுகளை பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் உண்மை.
குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுப்பதற்கு ராஜபக்ஷர்கள் தயார். ஆனால், ராஜபக்ஷர்கள் கள்ளர்கள் இல்லை. அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவடைந்து விட்டது. அரசியலமைப்பில் மேற்கொள்வதாக கூறப்பட்ட திருத்தங்கள் எவையும் இன்னுமே திருத்தப்படவில்லை. 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அறிகின்றேன்.
19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலில் இரண்டுதடவைகள் போட்டியிட்ட ஒருவர் அதற்கு மேல் போட்டியிடமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகின்றேன் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எனக்காக உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுத்தமை மட்டுமன்றி எதிர்ப்பு ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டனர். இவைதொடர்பில் சபாநாயகர் தனத்து தீர்மானத்தை அறிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.