19 ஆவது சட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்கின்றது சிக்கல்
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டவரைவை எதிர்வரும் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டவரைவுக்கு ஆதரவாக வாக் களிப்பதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நேற்று முன்தினம் தீர்மானித்துள்ள நிலையில், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் நேற்றும் "19' இற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டமையாலேயே இந்நிலை உருவாகியுள்ளது.
19 இற்கு ஆதரவாக வாக்களித்து, அதை நிறைவேற்றுவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், தாம் முன்வைக்கும் திருத்தங்களை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நேற்று உறுதிபடத் தெரிவித்தனர்.
அத்துடன், மக்கள் ஆணையைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் இந்தச் சட்டமூலம் அமைந்துள்ளது என்றும், நாட்டு மக்களுக்கு உறுதியளித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்தனர். மைத்திரி அரசின் 100 நான்கள் நிறைவடைந்துள்ளதால், வாக்குறுதியளித்தவாறு நாடாளு மன்றத்தைக் கலைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, குமார வெல்கம, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர். பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - தினேஷ் இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அரசின் 100 நாள்கள் திட்டம் நிறைவடைந்துவிட்டது. அதனால் அரசு கூறியதுபோல நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும்.
நல்லாட்சி அரசால் சமர்ப்பிக்கப் படவுள்ள 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தினூடாகவும் ஜனாதிபதிக் குரிய நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்படமாட்டாது. நாட்டு மக்களுக்கு காட்டிய அரசமைப்புத் திருத்தத்தை ஜனாதிபதியும, பிரதமரும் சமர்ப்பிக்கவில்லை என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றோம். இந்த சட்டமூலமானது மக்கள் ஆணையை கேள்விக்குட் படுத்துவதாய் அமைகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், அதற்கு மக்கள் அனுமதியைப் பெறவேண்டும். அதைச் செய்ய அரசு அஞ்சுகின்றது.
இந்த விடயத்தில் தன்னிச்சையாக - அரசமைப்புக்கு முரணாகச் செயற்பட அரசு முயற்சித்தால் பெரும் விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் - என்றார். இதேவேளை, சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டத்தின்போதே இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமக்குத்தாமே தடைபோட்டுக் கொண்டது அரசு - பீரிஸ் இதன்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாம் பாரிய எதிர் பார்ப்பைக் கொண்டிருந்தோம்.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டுமாயின், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய சரத்துக்களை நீக்கிவிட்டு, 19 ஐ நிறை வேற்றத் தயார் என்று கூறினார். இதனூடாக அரசு தமக்குத்தாமே தடைபோட்டுக் கொண்டது. சட்டமூலத்தின் சில சரத்துக்களுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் - என்றார்.