இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் – நெறிமுறையை மீறினாரா விக்னேஸ்வரன்?
பிரேமானந்தா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நான்கு இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக கவனம் செலுத்தக் கோரி, வட மாகாண முதலமைச்சர் , இந்தியப் பிரதமருக்கு அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தால், அது நெறிமுறை மீறலாக இருக்கும் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே, அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர்,
“முதலமைச்சர் முதலில் கடிதத்தை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்ப வேண்டும். இலங்கை வெளிவிவகார அமைச்சு தான் அதனை, குறிப்பிட்ட நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அனுப்ப முடியும். எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில், அண்மைய நாட்களாக, இத்தகைய இராஜதந்திர நெறிமுறையை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்படவில்லை.
ஏனென்றால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்து வருகிறது.நெறிமுறைகள் சீராகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், கடந்த காலத்தில் இந்தியப் பிரதமர் மோடிக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதங்களை எழுதிய போதிலும், அதற்கு கொழும்பு எந்த விதமான எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.