இலங்கையில் மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடா தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பு
இலங்கையில் மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடா தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இது குறித்து கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மிதிவெடியற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கனடா தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்கும் என்ற அறிவிப்பை ஏப்ரல் 4ஆம் திகதி கொண்டாடப்படும் ´மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தில்´ அடையாளப்படுத்துவதில் இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமான கனடா உயர்ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியடைகின்றது.
500இற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்தக் கூடிய 1000 ஹெக்டேயருக்கு மேற்பட்ட உயர் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகளை விடுவிக்க வசதிப்படுத்தும் வகையில், இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மிதிவெடி ஆலோசனைக் குழுவின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கனேடிய அரசாங்கம் 850 000 டொலர்களை வழங்கவுள்ளது.