பல்கலை மாணவர்கள் செயற்பாடு குறித்து பிரதமர் அலுவலகம் கவலை!
பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர்புகை குண்டு பிரயோகம் செய்யப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. கடந்த அரசாங்கமும் மாணவர்கள் மீது இவ்வாறு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதாக மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கண்டி - கொழும்பு வீதியின் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஒரு மணிநேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் கையளிக்க 5 மாணவர்களுக்கு அனுமதி அளித்த போதும் அவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாக சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பேரணி செல்ல இருந்த மாணவர்கள் முன் அறிவித்தல் இன்றி திடீரென பிரதமர் அலுவலகம் நோக்கிச் சென்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல் கவலை அளிப்பதாக பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








