இலங்கை வருகிறார் ஐ.நா உதவிச் செயலர்
ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஹோலியாங் சூ இலங்கைக்கு இந்தவாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஹோலியாங் சூ, ஐ.நா அபிவிருத்திக் குழுவின் ஆசிய- பசுபிக் பகுதிக்கான தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர், இரண்டாவது தடவையாக, வரும் 4ம் நாள் தொடக்கம், 10ம் நாள் வரை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவர் தனது பயணத்தின் போது இலங்கையின் உயர் மட்ட அரசாங்க அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளர்கள், மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். புதிய அரசியல் சூழலில், இலங்கையின் எதிர்பார்ப்புகள், எழுந்துவரும் அபிவிருத்தித் தேவைகளை அறிந்து கொள்ளவுள்ளதுடன், இலங்கையில் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் பங்கை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
இவர், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்துக்கும் சென்று அரசாங்க அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளையும் சந்தித்து உதவித் தேவைகள் குறித்து கலந்துரையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








