Breaking News

வலி.வடக்கில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் - சுரேஸ்

புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் வலி.வடக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணிகளுக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும். மீள்குடியேற்ற அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் கவனம் எடுத்து முகாம்கள் அமைந்துள்ள நிலங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன். 

 வலி.வடக்குப் பகுதியில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளை இன்று சுரேஷ் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில் வலி.வடக்கில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் காணி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அந்த 1000 ஏக்கர் காணிக்குள் இரண்டு பாரிய இராணுவ முகாம்களை உள்ளடங்கி இருக்கின்றது. எனவே இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால்தான் அந்தக் காணிக்குரிய ஏனைய மக்கள் குடியமரமுடியும். 

அந்த நிலத்துக்குரிய மக்கள் உரும்பிராய் பகுதியில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அவர்களுடைய மீள்குடியேற்றத்துக்கு அந்த நிலப்பகுதிகள் விடுவிக்கப்படவேண்டும். இந்தக் காணிகளை விடுவிக்கின்றபோது நீண்ட பெரும் முட்கம்பிவேலிகளை அமைக்கின்றார்கள். இந்த வேலிகள் எல்லாம் காணிகளைக் குறுக்கறுத்தே செல்கின்றது. ஒரு பகுதியில் மலசல கூடம் இருக்கின்றது மற்றொரு பகுதியில் வீடு இருக்கின்றது. 

இது ஒரு முட்டாள்தனமான ஏற்றுக்கொள்ளப்பட முடியாத செயற்பாடு. எந்த விதமான சிந்தனையுமற்ற தான்தோன்றித்தானமான முறையில் தான் இந்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் அந்தக் காணிகளில் குடியேற முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே இந்த அரசு மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போது இவற்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும். வீடுகளை விடுவிக்கும்போது அது முழுமையாக விடுவிக்கப்படுகின்றதா இல்லையா என்பதை பார்க்கவேண்டும். 

இராணுவம் தன்னுடைய இஸ்டத்துக்கு வேலிகளை அமைப்பதன் மூலம் மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையே ஏற்படுகின்றது. மக்கள் போக்குவரத்துச் செய்யும் வீதிகளை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்தப் பாதைகளுக்கு வெளியே முள்வேலி அமைக்கின்றது. இதனால் மக்களுக்கான போக்குவரத்து பாதைகள் இல்லை என்ற சூழல் ஏற்படுகின்றது. ஊடகங்கள் ஊடாக நாங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரிகளுக்கும் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் காணிகளை விடுவிக்கின்றபோது,காணிகளை ஊடறுத்து வேலிகளை அமைக்கின்றபோது முழுமையாக காணிகள் விடுவிக்கப்டுகின்றதா என்பதைப் பாருங்கள்.

 வீதிகளை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காமல் மக்கள் போக்குவரத்துக்கு விடுங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள முகாம்கள் அகற்றப்படவேண்டும். அதன் மூலம் தான் அந்த நிலத்துக்கு உரித்தான மக்கள் மீள்குடியேற முடியும். ஏறத்தாள 150 குடும்பங்களுக்கு உரித்தான இந்த நிலங்களை இராணுவம் அபகரித்து வைத்திருக்கின்றது. இந்த நிலைமை மாற்றப்படவேண்டும். இந்த விடயத்தை மீள்குடியேற்ற அமைச்சர் கவனத்தில் எடுத்து மிகுதி நிலங்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.