Breaking News

ரணில் தலைமையை இழப்பார்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடையும்

நடைபெறப் போகும் பாரத யுத்தத்தில் யாருக்கு வெற்றி என வேதவியாசரிடம் வினவுகிறார் துரியோதனனின் தந்தை திருதராட்டிரன்.இரண்டு கண்களையும் இழந்த நிலையில் திருதராட்டிரனின் கேள்வி மிகவும் வேதனை தரக் கூடியது. 

தன் புத்திரர்களுக்கு ஆபத்து நடந்து விடுமோ! என்ற ஏக்கம் திருதராட்டிரனை கடுமையாகப் பாதித்ததன் காரணமாக அந்தக் கேள்வி எழுகிறது.தர்மம் எங்குள்ளதோ! அங்கு வெற்றி உள்ளது என்கிறார் வியாசர். போரின் முடிவு என்னவாயிற்று என்பது நீங்கள் அறிந்ததே. 

இலங்கை அரசியலிலும் திருதராட்டிரனின் நிலையில் சிலர் உள்ளனர். எனினும் இங்கு போர் வெற்றி யாருக்கு என்பதல்ல கேள்வி. இலங்கையின் அரசியலில் என்ன நடக்கும் என்பதே கேள்வி. இந்தக் கேள்வி தென்பகுதி அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைச் சுட்டி நிற்கும். இப்படியான ஒரு கேள்விக்கு அளிக்கக்கூடிய பதில் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை இழக்க நேரிடும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைவுறும் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டாட்சியை நடத்தினாலும் இக்கூட்டு மகிந்த ராஜபக்­வை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக ஏற்பட்டதே தவிர, வேறு எந்த நோக்கமும் கொண்டது அல்ல. எந்த நோக்கத்திற்காக கூட்டாட்சி ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியாயிற்று. நோக்கத்தை நிறைவேற்றுவதில் இருதரப்புக்குப் பாரிய பங்கு உண்டு. 

இதில் ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. மற்றையது வல்லமை பொருந்திய சில நாடுகள்.இரண்டும் இணைந்து மகிந்த ராஜபக்­வை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தன. அந்த முடிவு நிறைவு பெற்றுவிட்டது. எனினும் மகிந்த ராஜபக்­ மீது கொண்டிருந்த பகைமை எந்தளவோ அந்த அளவிற்கு ரணில் மீதும் சந்திரிகாவுக்குப் பகைமை இருந்தது. 

எனினும் மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ரணிலின் பகைமையை ஒத்திவைத்தார் சந்திரிகா. இப்போது மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டாயிற்று. அடுத்து ஸ்ரீமான் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கான ஒரே வழி பிரதமர் பதவியை சந்திரிகா எடுத்துக் கொள்வதுதான்.

சந்திரிகா பிரதமராகும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கள் குடும்பத்தின் சொத்து என்பது போல சந்திரிகாவின் அணுகுமுறை அமையும். இவ் விடத்தில் மகிந்த ராஜபக்வின் ஆதரவாளர்கள் மகிந்தவோடு சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிப்பர். ஆக, தென் பகுதியில் இருக்கக் கூடிய இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணிலை நீக்குகின்ற வேலையை அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் செய்வர். அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடையும். 

எதுவாயினும் மகிந்த; ரணில் ஆகியோரை வீட்டுக்கு அனுப்புவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளவும் கைப்பற்றுவது என்ற சீமாட்டி சந்திரிகாவின் நோக்கு வெற்றி அடையும் வாய்ப்பு உண்டு என்பதை மட்டும் சமகால அரசியல் நிலையை வைத்துக் கூறமுடியும்.