குற்றவியல் சட்டத்தில் திருத்தம்! இன, மத குரோதத்தை தூண்டுவோருக்கு சிறைத் தண்டனை
இலங்கை குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந் துரைகளுக்கு அமைவாக குற்றவியல் சட்ட த்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிடுவோரை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இன மற்றும் மதவாத கருத்துக்களின் ஊடாக குரோத உணர்வைத் தூண்டும் நபர்கள் தண்டிக்கப்பட உள்ளனர்.
இந்த சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட உள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன மற்றும் மதக் குரோத கருத்துக்கள் முற்று முழுதாக தடை செய்யப்பட உள்ளன.இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு பாராளுமன்றில் உத்தேச பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத மற்றும் இனக் குரோதத்தை தூண்டுவோருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் 24 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.சட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.