அலிபாபாவும் 56 திருடர்களும் இன்று ஒன்று கூடியுள்ளனர் - ரவி தெரிவிப்பு
இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் மக்கள் மத்தியில் தூவி அவர்களை ஏமாற்றி மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக மஹிந்த ராஜபக் ஷ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் முயற்சிகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை என நிதியமைச் சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
"அலிபாபாவும் 40 திருடர்களும்" என்ற கதை உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்று எமது நாட்டின் அலிபாபாவுடன் 56 திருடர்களும் ஒன்று கூடி கைகோர்த் துள்ளனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். மாறாக மக்கள் மீதோ நாட்டின் மீதோ இவர்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளை சேர்ந்தவர்களுமாக 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஒன்றாக மேடையேறினர். அது தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளிலிருந்தும் சர்வாதிகார போக்கிலிருந்தும் நாட்டை பாதுகாப்பதற்பகாகவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு பிரதான கட்சிகளுடன் மேலும் பல கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று திரண்டனர். இதேபோன்று, மக்களும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நாம் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினோம். அதனடிப்படையில் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அதேபோல், மிக முக்கிய அம்சமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை சொனன்து போல குறைத்ு வரலாறு படைத்துள்ளோம்.
ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படு்ததியுள்ளோம். அதனை தொடர்ந்து முன்னெடுத்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதே எமது நோக்கமாகவுள்ளது. அதனை குழப்பி மீண்டும் நல்லாட்சியை கேள்விக் குறியாக்கும் முயற்சிகள் இன்று தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை நம்கி மக்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பல்வேறு மோசடிகள் வெளிக்கொணரப்பட்டன. அதனடிப்படையில் பல்வேறு வகையில் தகவல்கள் திரட்டப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் படிப்படியாக ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தேர்தல் முடிந்த கையோடு காட்டுச்சட்டத்தை போல் நாம் யாரையும் கைது செய்யவில்லை. அதற்கான காரணம் முறையான விசாரணைகளை நடத்தி உரிய சட்ட நடவடிக்கைகளையே எடுப்பதற்காகவேயாகும். அதனையே தற்போது காணமுடிகிறது.
இன்று நாட்டில் சட்டமும் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. சட்டத்துறையின் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதில்லை. அவை சுயாதீனமாக செயற்படுகிறது. இந்த நிலையை கடந்த ஆட்சி காலத்தின் போது காணக்கூடியதாக இருக்கவில்லை.
நாம் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு அரசியல் செய்யவில்லை. சகல இன,மத மக்களையும் அரவணைத்துக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகின்றோம். அதனை கூட சில சுயநல அரசியல்வாதிகள் இனவாத அடிப்படையில் திரிபுபடுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்.
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே இன்று மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் இதனை மக்கள் அறியாதவர்கள் இல்லை. அதற்கான நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.