தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு கால அவகாசம் கோரும் சிறுகட்சிகள்
தேர்தல் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பேரவை தெரிவித்துள்ளது.
நேற்று இந்த கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தினால் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எவ்வாறான தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அது குறித்து ஆராய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட காலமேனும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்ட மூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கூறியுள்ளார். இந்த பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.