Breaking News

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

பதவிக்காக எதுவும் செய்யத் தயார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ நிரூபி த்துள்ளார். இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்­, 19ஆவது திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பிரதம வேட்பாளர் பதவியில் தன்னை நிறுத்துமாறு கேட்டார். 

மகிந்தவின் கோரிக்கையை மைத்திரி முற்றாக மறுத்துவிட்டார். இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர்; இருந்தது போதும் இனி ஓய்வெடுப்போம் என்று நினைத்தாரா? என்றால் இல்லவே இல்லை. பதவி ஆசை விடுவதாக இல்லை. 

அதேநேரம் மகிந்தவை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதில் வாசுதேவ நாணயக்கார காட்டும் தீவிரத்தைப் பார்க்கும் போது,அட, சந்தர்ப்பம் கிடைக்காததால்தான் வாசுதேவ நாணயக்கார தன்னை ஒரு நல்ல மனிதராகக் காட்டினாரோ! என்று எண்ணத் தோன்றும்.

பாராளுமன்றத்தில் இவர்கள் எக்காலத்திலும் பிரதிநிதித்துவத்தைப் பெறமுடியாது என்றிருந்தவர்களில் வாசுதேவ நாணயக்காரவும் ஒருவர். ஏதோ! சந்தர்ப்ப சூழ்நிலையும் விகிதாசாரப் பிரதி நிதித்துவ முறையும் சேர்ந்து வாசுதேவ நாணயக்காரவை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியது. கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் தன்னை வலுப்படுத்த நினைத்த அவர், அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்­வை சந்தித்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.

சாதாரண ஒற்றைக் காரில் திரிந்த வாசுதேவ நாணயக்காரவுக்கு அமைச்சுப் பதவியும் அதனோடு கூடிய படோபகாரமும் கிடைக்க, அந்தாள் கண்மண் தெரியாமல் தனது சுயரூபத்தைக் காட்டிக் கொள்ளத்தலைப்பட்டார்.

இப்போது மகிந்த பதவி இழந்து போனார். இந்தப் பதவி இழப்பு மகிந்தவை விட, வாசுதேவ நாணயக்காரவையே கடுமையாகத் தாக்கியுள்ளது என்று கூறும் அளவில் நிலைமை உள்ளது.  மகிந்த பதவியில் இல்லாவிட்டால், தான் வெறு விலியாகிப் போய் விடுவேன் என்ற பயம் வாசு தேவவை உலுப்ப, எப்பாடுபட்டாவது மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்பதில் வாசுதேவ நாணயக்கார விடாப்பிடியாக உள்ளார்.

இந்தக் கோலத்தில் மகிந்தவின் ஆதரவாளர்கள் சிலரும் உள்ளனர் என்பதைக் கூறித்தானாக வேண்டும். எதுவாயினும் சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியாக இருந்து இந்த நாட்டில் தான் இட்டதே சட்டம் என்றிருந்த மகிந்த ராஜபக்­,மைத்திரியிடம் போய் பதவி கேட்பது என்பது அரசியலில் மிகவும் கீழ் இறங்கிய செயல்.

எனினும் நடிகர் கவுண்டமணியின் வார்த்தையில் அரசியலில் இதெல்லாம் சகயமப்பா என்று சொல்லி முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.இருந்தும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் ஆதரவாளர்களுக்கு அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றொரு நினைப்பு இருக்குமாயின் அவர்கள் செய்யக்கூடியது; மகிந்த மகாராஜா நீங்கள் அரசியலில் இருந்து முற்று முழுதாக துறவு பூண்டுவிடுங்கள் என்று சொல்வதாக இருக்கும். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ அரசியலில் மீண்டும் இறங்க வேண்டும் என நினைப்பாராயின் அது அவருக்குப் பேராபத்தைக் கொண்டு வரும் என்பது நிறுதிட்டமான உண்மை. அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்குகிறேன் என்று மகிந்த அறிவிப்பாராயின் அதுவே அவருக்கான மிகச் சிறந்த பாதுகாப்புக் கவசமாக இருக்கும்.

இதைவிடுத்து மீளவும் அரசியலில் இறங்க நினைத்தால், மகிந்த மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை தீவிரமாக்குங்கள் என்ற கோ­ம் மகிந்தவுக்கு எதிரானவர்களால் எழுப்பப்படும். இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால், அது மகிந்தவை தட்டேந்தவும் வைக்கும்.

-வலம்புரி