Breaking News

நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் இராணுவத்தினர் அகற்றப்பட மாட்டார்கள் -ரணில் திட்டவட்டம்

நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் இராணுவத்தினர் அகற்றப்பட மாட்டார்கள் என்றும் கடந்த கால த்தினை போலன்றி எதிர்காலத்தில் இராணு வத்தினர் கௌரவமாக நடாத்தப் படுவார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் 83 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற யுத்தத்தை தற்போது நிறைவுக்கு கொண்டு வந்ததில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ள நிலையில் கடந்த அரசாங்கம் இராணுவத்தினரை உரிய முறையில் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நிலமையை, மைத்திரி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இல்லாது ஒழிப்போம் என உறுதி அளித்தது போல் இராணுவத்தினருக்கான உரிய மரியாதை இனிவரும் காலங்களில் சரியாக வழங்கப்படும். அவர்களுக்குரிய வேலைகள் பகரிந்தளிக்கப்படும்.

கடந்த வாரம் நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இலங்கை விமானப்படையினூடாக இராணுவத்தினர் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதன்போது எமது இராணுவத்தினர் நேபாள படையினருடன் இணைந்து மிக சிரத்தையோடு பணி செய்திருந்தனர். எனவும் தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் வாழும் இடங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.