நாவற்குழி சிங்கள மக்களை பதிவு செய்யவில்லையென பிக்கு ஒருவர் முறைப்பாடு!
நாவற்குழியில் அத்து மீறி தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு அரச உதவிகள் எவையும் வழங்கப் படவில்லை என்று தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவிடம் அந்தப் பகுதியில் அமைந்துள்ள விகாரையின் பிக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அரச நிர்வாகத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு யாழ்.மாவட்ட அரச அதிபரைக் கேட்டுள்ளார். இதற்கமைய யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தென்மராட்சி பிரதேச செயலாளரை அழைத்து இன்று விளக்கம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக குறித்த பகுதிக்குச் சென்று நிலைமையை ஆராயுமாறும் அரச அதிபர் பணித்துள்ளார். இதேவேளை நாவற்குழியில் 70 சிங்களக் குடும்பங்கள் வரையில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களில் 8 குடும்பங்கள் மாத்திரமே தமது குடும்ப அட்டைப் பதிவுகளை இங்கு மேற்கொண்டுள்ளன.
குடும்ப அட்டைப்பதிவு மேற்கொள்வதாயின் முன்னர் வசித்த பிரதேசத்திலிருந்து சகல பதிவுகளையும் உத்தியோகபூர்வமாக நீக்க வேண்டும். மேலும் குடும்ப அட்டைப் பதிவுகள் மேற்கொண்டு மீளக்குடியமரும் குடும்பங்களுக்கு மாத்திரமே உதவிகள் வழங்க முடியும் என்று அரச அதிகாரிகள் தெரிவித்தனர்