மாத்தறை அணிவகுப்பில் மைத்திரி மீது கல்வீச திட்டம்?- இரு கடற்படையினர் கைது
மாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தகவல் வெளியிடுகையில்,
“மாத்தறையில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற, மாற்றுத்திறனாளியான கடற்படைச் சிப்பாய் ஒருவரின் சக்கரநாற்காலியை தள்ளிச் சென்ற கடற்படை சிப்பாய் ஒருவரிடம் இருந்த பையில் இருந்து கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதுதொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என்றும் தன்னை சிக்கலில் மாட்டிவைக்க வேறு எவரேனும் தனது பையில் கல்லைப் போட்டிருக்கலாம் என்றும் குறித்த கடற்படைச் சிப்பாய் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் மற்றொரு கடற்படைச்சிப்பாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்கள் இருவரையும், மே 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அணிவகுப்பில் இவர்கள் எதற்காக கல்லைக் கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
அதேவேளை, அண்மையில் அம்பாந்தோட்டையில் நடந்த கூட்டம் ஒன்றில், நாமல் ராஜபக்சவுடன் சென்ற இராணுவ கொமாண்டோ ஒருவர் கைத்துப்பாக்கியுடன், ஜனாதிபதியை நெருங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி 4ம் நாள் நடந்த சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பிலும், மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற புலனாய்வுத் தகவலை அடுத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.