Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை

முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை யில், நடத்தப்பட்ட நினைவுநாள் நிகழ்வு தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு  காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று, காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து நேற்றுக்காலை முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது. முன்னதாக, முல்லைத்தீவு காவல்துறைப் பிரதேசத்துக்குள், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்த நிகழ்வுகளையும், நடத்தக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம், சனிக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள,  காவல்துறைப் பேச்சாளர்,

“இந்த நிகழ்வு இடம்பெற்ற சூழல் மற்றும் இதன் நோக்கம் தொடர்பாக நாம் இன்னமும், உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நிகழ்வு அமைப்பாளர்கள், இது போரில் இறந்து போன தமது உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு என்று கூறுகின்றனர்.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவு ஒன்று உள்ளது. இதுகுறித்து நாம் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்போம். நீதிமன்றமே இறுதியான முடிவை எடுக்கும். நீதிமன்றம் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் பேரணிகளையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்தக் கூடாது என்று தான் கூறியுள்ளது. ஆனால், தாம் பேரணியையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்தவில்லை என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.